Sunday 5 January 2014

ஹைட்ரோ கார்பன்கள்

ஹைட்ரோ கார்பன்கள்

கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் ஆக்கப்பட்ட எளிய கரிமச் சேர்மங்கள் ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுகின்றன. இவற்றில் கார்பன் நான்கு இணைதிறனையும், ஹைட்ரஜன் ஒரு இணைதிறனையும் உடையன.

கரிமச் சேர்மங்கள் இரு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவை: 

1.  திறந்த சங்கிலித் தொடர் அல்லது அலிபாட்டிச் சேர்மங்கள் 

2. மூடிய அமைப்புள்ள அல்லது வளையச் சேர்மங்கள்

கார்பன் அணுக்களின் நான்கு இணைதிறன்களும் நான்கு அணுக்கள் அல்லது  தொகுதிகளுடன் ஒற்றைப் பிணைப்பின் மூலம் பிணைக்கப்பட்டிருப்பதால் இத்தகைய கார்பன்கள் உள்ள சேர்மங்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுகின்றன. ஏனெனில் அவை மேலும் சில அணுக்களுடனோ அல்லது தொகுதிகளுடனோ பிணைப்பு ஏற்படுத்த முடியாது.

கார்பன் அணுக்கள் தமிமிடையே பல பிணைப்புக்களால் (குறைந்த அளவு ஒரு இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பு) பிணைக்கப்பட்டிருந்தால் அத்தகைய சேர்மங்கள் நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் எனப்படும்
.
நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் CnH2n+2 (n-ன் மதிப்பு = 1,2,3,4...) என்ற பொதுவான வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகின்றன.

ஆல்கேன்களில் முதல் சேர்மம் மீத்தேன். மீத்தேனின் வாய்பாடு CH4+ இரண்டாவது சேர்மம் ஈத்தேன். இதன் வாய்ப்பாடு C2H6 . மற்றவைகளை ஒப்பிடுகையில் இவை நிலைத்தன்மை உடையவை. ஏனெனில் அவை நிறைவுத் தன்மை உடையவை. எனவே அவை பாரஃபீன்கள் என அழைக்கப்படுகின்றன.

நிறைவுறா ஹைட்ரோ கார்பன்களான அல்கீன்கள் CnH2n என்ற பொதுவான வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகிறது. இவை ஒலிஃபீன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. எளிய ஒலிஃபீனின் வாய்ப்பாடு C2H4 இதன் சாதாரணப் பெயர் எத்திலீன்.

அல்கீன்கள், கார்பன் அணுக்களுக்கிடையே ஒன்று அல்லது அதற்கு அதிகமான இரட்டைப் பிணைப்பைக் கொண்டுள்ளன.

இரு அணுக்களுக்கிடையே இரு எலக்ட்ரான் இணை பங்கிடப்பட்டு இரு சகப்பிணைப்பு ஏற்பட்டால், அவ்வணுக்கள் இரட்டைப் பிணைப்பால் சேர்ந்துள்ளன என அறியலாம்.

 நிறைவுறா ஹைட்ரோ கார்பன்களின் மற்றொரு வகை அல்கைன்களாகும். அதன் பொதுவான வாய்ப்பாடு CnH2n-2 இதன் சிறப்பம்சம் இதிலுள்ள கார்பன் - கார்பன் அணுக்களுக்கிடையேயான முப்பிணைப்பாகும்.

ஆல்கைன் வரிசையில் முதல் சேர்மத்தின் வாய்ப்பாடு C2H2 ஆகும். இது அசிட்டிலின் எனப்படும். எனவே அல்கைன்கள், அசிட்டிலீன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.